ஆடிப்பிறப்பு


ஆடிப்பிறப்பு 

* தை முதல் ஆனி வரையுள்ள ஆறு மாத காலம் உத்தராயண காலமாகும்.

* தட்சணாயணத்தின் தொடக்க தினம் ஆடிமாத முதலாம் நாள் ஆகும்.*

* ஆடிப்பிறப்பு சைவத் தமிழ் மக்களினால் ஆடிமாத முதலாம் நாள் கொண்டாடப்படும் பண்டிகை ஆகும்.

* சூரியன் வடதிசை நோக்கிச் சொல்லும் தை முதல் ஆனி வரையுள்ள ஆறு மாத காலம் உத்தராயண காலமாகும். இது தேவர்களுக்கு ஒரு நாளின் பகல் பொழுதாகும். அடுத்து சூரியன் தெற்கு நோக்கிச் செல்லும் காலம் ஆடி முதல் மார்கழி வரையுள்ள ஆறு மாத காலம் தட்சணாயண காலமாகும். இது தேவர்களுக்கு இராப்பொழுதாகும். தட்சணாயணத்தின் தொடக்க தினம் ஆடிமாத முதலாம் நாள் ஆகும்.
 
* இக்காலம் கோடை கால வெப்பம் தணிந்து குளிர்மை படிப்படியாக பெருகும் இயல்புடையது. இந்நாளில் ஈழநாட்டுத் தமிழ் மக்கள் ஆடிக்கூழ் கொழுக்கட்டை என்னும் உண்டி வகைகளை விசேஷமாக செய்து குடும்ப விருந்தாக உண்டு மகிழ்தல், விசேஷ வழிபாடு செய்தலும் உற்றார், உறவினர்களுக்கு இவ்வுண்டி வகைகளை வழங்கி நல்லுறவைப் பேணுதலும் வழக்கமாகும்.

இவ்வாறாக தமிழர்களின் வாழ்வியலோடு பின்னிப் பிணைந்து பின்பற்றப்படும் சடங்காக #ஆடிப்பிறப்பு விளங்குகிறது.

எங்கள் வீட்டில் ஆடிக்கூழ் கட்டாயமிருக்கும். எனக்கு ஒரு சின்ன வருத்தம். ஈழத் தமிழர்கள் பாரம்பரியமாக ஆடிமாதத்தில் முதலாம் திகதி ஆடிக்கூழ் காட்சி உண்ணுவது வழக்கம். ஆனால் புலத்தில் இப்பொழுது மிகவும் குறைவானவர்களே ஆடிக்கூழ் காட்சுவது வழக்கம்.


ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்த மானந்தம் தோழர்களே!
கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!

பாசிப்பயறு வறுத்துக்குத்திச் செந்நெல்
பச்சை அரிசி இடித்துத் தெள்ளி,
வாசப்பருப்பை அவித்துக்கொண்டு நல்ல
மாவைப் பதமாய் வறுத்தெடுத்து,

வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே
வேலூரில் சக்கரையுங்கலந்து,
தோண்டியில் நீர்விட்டு மாவை அதிற்கொட்டி
சுற்றிக் குழைத்துத் திரட்டிக்கொண்டு.

வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித்தட்டி
வெல்லக் கலவையை உள்ளே இட்டு
பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பளே
பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே!

பூவைத் துருவிப் பிழிந்து பனங்கட்டி
போட்டு மாவுண்டை பயறுமிட்டு
மாவைக் கரைத்தம்மா வார்த்துத் துழாவுவள்
மணக்க மணக வாயூறிடுமே

குங்குமப் பொட்டிட்டு பூமாஇலை சூடியே
குத்து விளக்குக் கொளுத்தி வைத்து
அங்கிளநீர் பழம் பாக்குடன் வெற்றிலை
ஆடிப் பாடிப்பும் படைப்போமே

வன்னப் பலாவிலை ஓடிப்பொறுக்கியே
வந்து மடித்ததைக் கோலிக்கொண்டு
அன்னை அகப்பையால் அள்ளி அள்ளி வார்க்க
ஆடிப் புதுக்கூழ் குடிப்போமே

வாழைப் பழத்தை உரித்துத் தின்போம் நல்ல
மாவின் மாவின் பழத்தை அறுத்துத் தின்போம்
கூழைச் சுடச் சுட ஊதிக்குடித்துக்
கொழுக்கட்டை தன்னைக் கடிப்போமே

ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்த மானந்தந் தோழர்களே
கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!

-நவாலி சோமசுந்திரப்புலவர்



ஆடிக்கூழ் செய்யும் முறை

தேவையான பொருட்கள்:

ஒரு கைப்பிடி வறுத்த பயறு
கால் மூடித் தேங்காய் சிறிது சிறிதாக வெட்டியது
ஒரு பேணி - பச்சரிசி மா
அரைமூடித்தேங்காய்ப்பால்
பனங்கட்டி (கருப்பட்டி)...-பெரிது 5 சிறிது ஏழு/ எட்டு
மிளகுத்தூள் தேவையான அளவு
சீரகத்தூள் தேவையான அளவு
ஏலக்காய் - தேவையான அளவு

முதலில் சுத்தமாக கழுவிய பாத்திரத்தில் வறுத்த பயறையும் சிறிதாக வெட்டிய தேங்காய்ச்சொட்டுக்களையும் அவிய விடவும் தண்ணீர் தேங்காய்ச்சொட்டையும் பயறுக்கும் மேலான அளவில் நின்றால் போதுமானது.( அடுப்பை போடுங்க முதலில்))...


கலவை 1
இன்னொரு பாத்திரத்தில் அரைமூடித்தேங்காய்ப்பால், கருப்பட்டி, பச்சரிசி மா மூன்றையும் கலந்து வைக்கவும் கருப்பட்டி கரையும் வரை கலந்து கொள்ளவும்.


பயறும், தேங்காய்ச்சொட்டும் வெந்தவுடன் அதற்குள் கலவை ஒன்றைச் சேர்த்து அவிய விடவும்.

எல்லாம் கரைந்து மேலே கொதிக்கும் நிலையில் வந்ததும்

அடுப்புச்சூட்டை இதமான வெப்பத்தில் விட்டு. அதற்குள் மிளகுத்தூள், சீரகத்தூள், கலந்து இறக்கும் போது ஏலக்காயைத் தட்டிப்போடவும்...

நம்ம ஆடிக்கூழ் தயார்... பலாஇலைக்கெல்லாம் எங்க போறது....வாயை வைச்சு உறிஞ்சிக்குடியுங்கோ





கருத்துகள்

www.bogy.in இவ்வாறு கூறியுள்ளார்…
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in
sri இவ்வாறு கூறியுள்ளார்…
wow yummmy i want to make and eat it :)
S.Balamuraly இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி
Kannan இவ்வாறு கூறியுள்ளார்…
மிகவும் அருமை. நன்று.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

​ஆடி அமாவாசை விரதம் / சித்ரா பௌர்ணமி விரதம் ::

வீட்டில் இறந்தவர்களின் படங்களை எப்படி வைத்து வழிபட வேண்டும்?

பித்ரு தோஷம்