புரட்டாதிச்சனிக்கிழமை….சின்னவயதின் பசுமை நினைவுகள்……

புரட்டாதிச்சனிக்கிழமை



காலச்சக்கரத்தின் சுழற்சி பிரமிப்பூட்டுகின்றது; ஒவ்வொரு வருடத்தின் போதும் 

இப்படித்தான் சொல்லிக்கொண்டிருக்கின்றோம். இலங்கையில் அம்மா இருந்த போது இத்தனை வேகமாக நாட்கள் நகர்வதை நான் உணந்ததில்லை. அன்றிலிருந்து எப்படிப் வருடங்கள் ஓடி மறைந்ததோ என்பது ஆச்சரியமூட்டினாலும் உண்மையென்பதை மனம் உணர்ந்து கொள்கின்றது. எனக்கு மிகவும் பிடித்த விரதகாலங்களின் எனக்கு மிகப்பிடித்த புரட்டாதிச்சனிக்கிழமை விரதம். ஏன் பிடித்தது என்பதைச்சொன்னால் 
சிரிப்பீர்கள்.அங்கிருந்த வாழ்க்கைக்கும் இங்கிருக்கும் வாழ்க்கைக்கும் 
மிகப்பெரும் வேறுபாட்டை இங்குள்ள காலநிலைதான் வரையறுத்து வைத்திருக்கின்றது. அங்கிருந்த போது இந்த விரத நாட்கள் எல்லாம் எத்தனை மகிழ்ச்சியையும் நிறைவையும் நமக்குள் வார்த்து விட்டுப்போனது என்பதற்கான அடையாளமாய்….என் சின்னவயதின் பசுமை நினைவுகள்…… 
‘அட! புரட்டாதிச்சனிக்கிழமை விரதம். அதைப்பற்றிச்சொல்லியே ஆகவேண்டும். அம்மா, அப்பா, அக்கா அண்ணாவோடு விளையாட்டாக நாங்கள் ஆரம்பித்த விரதம் இது ஏனெண்டால் விரதகாரருக்கு மட்டும் தான் “வாழையிலையில்” விருந்து கிடைக்கும். அந்த வாழையிலைச்சாப்பாட்டுக்கு ஆசைப்பட்டு எங்கள் 6 வயதில் இந்த விரதம் பிடிக்கத்தொடங்கி விட்டோம். ‘வாழை வீட்டின் பின்புறத்திலேயே 
அமைந்த்தினால் இலைக்கொன்றும் பஞ்சமிருக்கவில்லை. ஆனால் ‘தலைவாழை” 
இலையாருக்கென்பதில் எங்களுக்குப் போட்டி நடக்கும். அன்றுதான் ஓடிப்போய் யார் முதலாவது இலை வெட்டுறதுன்னு நாங்களே பந்தயம் வைச்சுக்குவோம். எப்படியும் ஒரு தலைதான் ஒரு வாழையிலையில் இருக்க முடியும்?! ஒவ்வொருவருக்கு ஒவ்வொருமுறையென்ற விட்டுக்கொடுப்போடு எல்லோரும் சமாதானமாவோம். 
மற்றைய விரதம் மாதிரி இல்லை. சனிஸ்வரனிடம் எல்லோருக்கும் “பயபக்தி” அதிகம். பக்தியை விட பயத்தினாலேயே அன்று மச்சத்தை விரும்பினாலும் நாங்களே தொடக்கூட மாட்டோம். வியாழன்,வெள்ளி என்று தொடர்ந்து சைவச்சாப்பாடே ஆனாலும் 
புரட்டாதிச்சனியன்று எப்படியும் ‘நல்லெண்ணைய் வைத்து முழுகிக் குளித்து 
விட்டுத்தான் சமையலையே தொடங்குவார் அம்மா. உப்பு,புளி,காரத்தின் சுவைகூடப்பார்க்க மாட்டார். ‘அது என்னவோ தெரியவில்லை விரதம் இருக்கின்ற போதுமட்டும்தான் புதுமையாய்ப் பசியெடுக்கும் எனக்கு. அதுவும் புரட்டாதிச்சனிக்கிழமையில் எண்ணெய் வைத்து முழுகி வருவதாலோ என்னவோ ‘பசி” ஒரு வாட்டு வாட்டித்தான் எடுக்கும். 
புரட்டாதிச்சனிக்கிழமை நாட்களில் மட்டும் எப்பொழுதும் மாறாமல் ஒரே மாதிரிக் 
கறிவகைகளைத்தான் அம்மா செய்வார். பருப்பு, கத்தரிக்காய் வெள்ளைக்கறி, முருங்கை இலைச்சுண்டல், உருளைக்கிழங்குப்பிரட்டல், ரசம், அப்பளம், மிளகாய்ப்பொரியல், வடகம். அன்று எல்லாமே புதிதான அப்பளம், மிளகாய்ப்பொரியல், வடாம் தான் ஏற்கனவே செய்துவைத்தவை அன்று சாப்பாட்டு மேசைக்கு வராது. சனிஸ்வரனுக்காக கறுப்பு வண்ணக் கறி சமைப்பது என்று அம்மா சொல்லுவார். அதுமட்டுமே அல்ல இந்தக்கறிகளுக்கு மேல் நல்லெண்ணெய் விட்டு ஊற்றிச்சாப்பிடத்தான் தோதாகவும் இருக்கும். எப்படியும் மதியம் 12:30 மணிக்குள் அம்மா சமையலை முடிச்சு விடுவா. 
அதுக்குப் பிறகுதானே இருக்கு விளையாட்டு 
ஒரு சின்ன தட்டில்(சனிஸ்வரனுக்கென்றே விசேஷமானது) அன்றைய சமையலைப் படைத்து விட்டு வெளியில் கொண்டு போய் ‘கா, கா கா என்று ‘காக்காவை அழைத்து ‘அது எப்படா வரும் என்ற் பார்ப்பதில் பசி வயிற்றைக் கிள்ளத்தொடங்கிவிடும். எப்பவுமே வருகை 
தரும் காக்கையார் அன்றைக்கு ரொம்பவே பிகு பண்ணுவார். பல வீட்டில் விருந்தல்லவா அவருக்கு. அதனால் ஓய்ந்து போய் நிற்கும் வேளையில் எதேச்சையாய் எட்டிப்பார்த்து ‘பட்” என்று அப்பளத்தை தூக்குவார். ‘அம்மா காக்கா அப்பளம் தூக்கிப்போட்டுது” என்ற படி சமையலறைக்குள் நுழைவோம் அன்றைய விருந்துக்காக!. 
சின்னவயதின் பசுமை நினைவுகள்…… 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

​ஆடி அமாவாசை விரதம் / சித்ரா பௌர்ணமி விரதம் ::

வீட்டில் இறந்தவர்களின் படங்களை எப்படி வைத்து வழிபட வேண்டும்?

பித்ரு தோஷம்