பூப்புனித நீராட்டுவிழா முதல் பாரம்பரிய சடங்குகள்


பூப்புனித நீராட்டுவிழா முதல் பாரம்பரிய சடங்குகள்

பெண் முதல் மாதப்போக்கு ஏற்பட்ட அன்றே சில சடங்குகள் உள்ளதாயினும், பூப்புனித நீராட்டுவிழா 9ஆம் 11ஆம் நாட்கள் அல்லது அதையடுத்துவரும் நாட்களில் அல்லது மாதங்களில் நடத்தப்படுகின்றன. 

இவ்விழா மற்றும் இதற்கான சடங்குகள் அவர்கள் சார்ந்த இடம், மக்கள் கூட்டம் போன்றவைகளுக்கு ஏற்பசடங்குகள் இடத்துக்கு இடம் மாறுகின்றன .

அன்றைய காலங்களில் கிணற்றடியில் காய்ந்த இலைகளின் மேல் இருத்தி தாய் மாமன் தேங்காய் உடைக்க,மாமி(தந்தையின் சகோதரி) தண்ணீர் ஊற்றி நீராட்டுவார்கள். 

இந்நிகழ்வு நடைபெறும் பொழுது வெள்ளி தெரிந்தவுடன் வரும் மாலைப்பொழுதாகும். 

கிணற்றடி பொது இடம், பெண்ணில் இருந்து வெளிப்படும் தீட்டு பிறர் கண்ணில்படாது குப்பைக்குள் மறைந்துவிடும் என்பதால் காய்ந்த இலைகளின் மேல் இருத்தி நீராட்டுவார்கள். 

இது முதற்தண்ணி அல்லது கண்ட தண்ணி வார்த்தல் எனப்படும்.

பின்பு பெண்ணிற்கு புதிய ஆடை அணிவித்து பெற்றோரினது காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றபின்னர்

உப்பெண்ணெய்(முதற்தணணி வார்த்ததும் கொடுப்பார்கள்)

உப்பெண்ணெய் 

தேவையான பொருட்கள்:-

நல்லெண்ணெய் - 1 மேசைக்கரண்டி

உப்பு - அளவாக

செய்முறை :-

நல்லெண்ணெயையும் உப்பும் சேர்த்துக் நன்கு கலந்து கொள்ளவும்.

குறிப்பு :

• பருவமடைந்த தினத்தன்று முதன்முதலாக இத்திரவ உணவைக் கொடுப்பது வழக்கத்திலுள்ளது.

ஒரு தனியறையில் பெண்ணை விடுவர். 

அவ்வறையில் வேப்பிலை மற்றும் காம்புச்சத்தம் முதலானவற்றை இருப்பிடத்தின் மேல் செருகிவிடுவர். 

கத்தரிக்காய்ச்சாறு பச்சை முட்டை 

முதல் 3 நாட்கள் அதிகாலை

நல்லெண்ணெய் ,பச்சை முட்டையும்,கத்தரிக்காய்ச் சாறும் கொடுப்பார்கள்.

செய்முறை :-

பிஞ்சுப்பதமான கத்தரிக்காயை வெட்டிக் கழுவித்சிறிய உரலில் போட்டு இடித்து துவைத்து இரண்டு மேசைக் கரண்டியளவு சாறுபிழிந்தெடுத்து . பச்சை முட்டையைக் கொடுத்ததன் பின் - சாற்றைக் கொடுக்கவும் (தொடர்ந்து முதல் ஏழுநாட்களுக்கு அதிகாலையில் கொடுக்கலாம் அத்துடன் நல்லெண்ணெய் கொடுப்பது வழக்கம்.)

இதைக் குடித்தால் பெண்களுக்குப் பிரத்தியேகமாக ஏற்படும் நாரி வலி பின் ஒருபோதும் தோன்றாது

இல்லாவிடில் சூதக நாட்களில் பெண்ணுக்கு வயிற்று வலி தங்க முடியாத வேதனையாக இருக்கும் .இதற்காகவே வழுதுணங்காய்யை(கத்தரிக்காய்) சாறு பிழிந்து கொடுப்பார்கள் .

முட்டைக் கோப்பி

3 நாட்களின் பின் தொடர்ந்து காலை நேரம்.

மஞ்சட் கூட்டு  

2ம் நாள் தொடக்கம் தொடர்ந்து 3 நாள் காலை இடைவேளை

மஞ்சட்கூட்டு

தேவையான பொருட்கள் :-

நற்சீரகம் - 1 மேசைக்கரண்டி

மஞ்சள் - சிறிய துண்டு

பனங்கட்டி - ½ மேசைக்கரண்டி

வேப்பிலைக் கொழுந்து - 5 (சிறிது)

நொச்சி கொழுந்து -5 (சிறிது)

மாதுளை கொழுந்து -5 (சிறிது)

செய்முறை :-

• நற்சீரகம், மஞ்சள், வேப்பிலைக் கொழுந்து ,நொச்சி கொழுந்து ,மாதுளை கொழுந்து யாவற்றையும், அம்மியில் வைத்து நன்கு பசுந்தாக அரைத்துக் கொள்ளவும்.

• அரைத்து இறுக்கமான உருண்டையாக்கிக் கொள்ளவும்.

• அதனுடன் பனங்கட்டியையும் உதிர்த்துச் சேர்த்து விழுங்கக் கூடிய சிறு உருண்டைகளாக்கிக் கொடுக்கவும்.

பச்சைச் சரக்கு

5ம் நாள் தொடக்கம் தொடர்ந்து 15 நாட்கள் வரை காலை- இடைவேளை 

தேவையான பொருட்கள் :-

நற்சீரகம் - 1½ மேசைக்கரண்டி

மஞ்சள் - சிறிய துண்டு

மிளகு - 2

இஞ்சி - சிறிய துண்டு

பனங்கட்டி - ½ மேசைக்கரண்டி

செய்முறை :-

நற்சீரகம், மஞ்சள், மிளகு, இஞ்சி யாவற்றையும், அம்மியில் வைத்து நன்கு பசுந்தாக அரைத்துக் கொள்ளவும்.

அரைத்து இறுக்கமான உருண்டையாக்கிக் கொள்ளவும்.

அதனுடன் பனங்கட்டியையும் உதிர்த்துச் சேர்த்து விழுங்கக் கூடிய சிறு உருண்டைகளாக்கிக் கொடுக்கவும்.

பாற்சோறுடன் தனிபத்தியக்கறி

பருவமடைந்த தினம் தொடக்கம் தொடர்ந்து 07 நாட்கள் வரை மதியம்- இரவு

பாற்சோறு தவிடு நீக்கிய சிவப்புப் பச்சை அரிசியில் தயாரிக்கப்பட வேண்டும்.

தனிபத்தியக்கறி

தேவையான பொருட்கள்:-

நற்சீரகம் -1 ½ மேசைக் கரண்டி

மஞ்சள் - சிறிய துண்டு

இஞ்சி - சிறிய துண்டு

வேர்க்கொம்பு - சிறிய துண்டு

மிளகு - 6

வெள்ளைப்பூடு - 6 பல்லு

உப்பு - அளவாக

நீர் - 2 தம்ளர்

செய்முறை :-

சீரகம், மஞ்சள், இஞ்சி, வேர்க்கொம்பு, மிளகு, இவற்றை நன்கு பசுந்தாக அரைத்து இரண்டு பல்லு வெள்ளைப் பூண்டையும் சேர்த்து அரைத்துத் திரணையாக்கவும்

அரைத்த கூட்டை நீரிலிட்டு உப்பும் சேர்த்துக் கரைத்து மிகுதி வெள்ளைப்பூட்டையும் சேர்த்துக் கொதிக்க வைத்து வற்றமுன் இறக்கிக் கொள்ளவும்.

கைக்குத்தரிசிச்சோறு 

7 நாட்களின் பின் தொடர்ச்சியாக மதியம் இரவு

கைக்குத்தரிசிச்சோறு, சீரக முட்டைப் பொரியல், கத்தரிக்காய், வெங்காயப் பொரியல், தனிபத்தியக்கறி, காய்கறி வகை, பாற்கறி.

15 நாட்களின் பின் மீன்பத்தியக்கறிகோழி விறாத்து(கோழி பத்தியக்கறி) மதியம் கொடுக்களாம்

உழுத்தங்களி

15 நாட்களின் பின் காலை- மாலை

வெங்காயப்பிட்டு

15 நாட்களின் பின் காலை

ஆலங்காய்ப்பிட்டு

15 நாட்களின் பின் காலை-மாலை

ஓட்டுமா (முட்டைமா)

20 நாட்களின் பின் காலை-மாலை இடைவேளை

எள்ளுப் பா

20 நாட்களின் பின் காலை-மாலை இடைவேளை

இலகுவாக சமிபாடடையக் கூடிய ஊட்டநலன் உள்ள உணவுகளைக் கொடுப்பதே அவசியம் 

அனைத்து உணவுகளிலும் உழுந்தும், நல்லெண்ணெயும் மிகுதியாகச் சேர்க்கப்படல் வேண்டும் 

பெண் பூப்படைந்தபோது அணிந்திருந்த ஆடையினை குடும்பச் சலவைத் தொழிலாளிக்குக் கொடுப்பதே மரபாக உள்ளது.

அழுக்கடைந்த சேலையை சலவைத் தொழிலாளி எடுத்துச் சென்று ஒரு பெண் பூப்படைந்து விட்டாள் என்பதை உறுதிப்படுத்துவார். அவ்வீட்டில் உள்ள அனைவருக்கும் 9ஆம் 11ஆம் நாட்கள் துடக்காகையால் அதை நிவர்த்தி செய்வதற்கு பிராமணர் சேர்ந்த ஒருவரை அழைத்து புண்ணியவாசம் செய்வார்கள். 

முன்பு கிராமபுறங்களில் பூப்பெய்தி 4 ஆம் நாள் பசும் பால் வைத்து நீராட்டித் துடக்கைப் போக்குவார்கள்.

சடங்கு செய்வதற்குச் சுபநாள் ஒன்றைத் தெரிவுசெய்து அன்று பருவடைந்த பெண்ணின் இரண்டு கைகளிலும் பாக்கும் சில்லறைக் காசும் வைத்துச் சுருட்டப் பெற்ற ஒரு வெற்றிலையைக் கொடுத்து, தலையில் வெள்ளைத் துணியால் முகத்திரை இட்டு (அபசகுனங்களைப் பார்க்காமல் இருப்பதற்கு) மாமியார் பால் அறுகு வைக்கும் இடத்திற்கு அழைத்து வந்து, கிழக்கு அல்லது வடக்கு நோக்கி பார்க்ககூடியதாக பாயின் மேலோ அல்லது ஒரு வெள்ளைத்துண்டை இட்டு அதன் மேலோ பருவமடைந்த பெண்ணை உட்கார வைப்பர். அவளின் முன் நிறைகுடம், குத்து விளக்குகள், ஒரு பாத்திரத்தில் பால், அறுகம் புல், சில்லைறைக் காசு முதலியனவும், வேறு ஒரு தட்டில் பழம், பாக்கு வெற்றிலையும், ஒரு தேங்காயுடன் உடைப்பதற்கு கத்தியும் பாத்திரமும் வைப்பர். 

இச்சடங்கில் தாய்மாமன், மாமிக்குத்தான் முக்கிய இடம் அளிக்கப்படும். பெண்ணை நிறைகுடம் விளக்கில் பார்க்கும்படி பெண்ணுக்குக் கூறி முகத்திரையை விலக்கி விட்டு அதன் பின் கற்பூரம் ஏற்றி பிள்ளையாரைத் துதித்து எடுத்த காரியம் இனிதே நடைபெற வேண்டும் என்று நினைத்து வணங்க வேண்டும். தாய்மாமன் தேங்காய் உடைப்பார். பின் பால், அறுகு இருக்கும் தட்டில் சில்லறைக்காசு போட்டு மாமியார் இருகைகளாலும் எடுத்து பெண்ணை ஆசீர்வதித்து தலையில் வைப்பார்கள் அதைத் தொடர்ந்து 5 பேர் அல்லது 11பேர் என ஒற்றை எண்ணிக்கையாலனவர்கள் பாலறுகு வைப்பர். பாலறகு வைத்து முடிந்ததும் பெண்ணை நீராட்டும் இடத்திற்கு அழைத்துச் சென்று அங்கும் கிழக்கு அல்லது வடக்கு முகமாகப் பெண்ணை இருத்தி முதலில் தாய்மாமன் தலையிலே தண்ணீரை ஊற்றுவார். அதனைத் தொடர்ந்து ஏனையவர்களும் ஊற்றுவார்கள். 

பெண்ணுக்கு மஞ்சள் பூசி நன்கு நீராட்டி மீண்டும் தலையைத் துணிகொண்டு மூடி அழைத்து வந்து சுடர்விட்டு பிரகாசிக்கும் குத்துவிளக்கை தரிசிக்க விடுவர்.

பின்பு பெண்ணை அலங்காரம் செய்து (பட்டாடை அணிந்து, அணிகலன்கள் பூண்டு முகத்தை மெல்லிய திரையால் மறைத்த வண்ணம்) தோழிகள் குத்துவிளக்குடன், பெற்றோர் மற்றும் உறவினர் மேடையை நோக்கிச் அழைத்து வருவர். அதன்பின் பெற்றோர் பெண்ணின்முகத்திரை எடுக்க பெண் பெற்றோரினது காலில் விழுந்து ஆசீர்வாதம் பெறுவாள்.

அதனுடன் பெற்றோர் ஆண்டாள் மாலையை பெண்ணின் கழுத்தில் இட ,தாய் மாமன் மாமியினதும் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெறுவாள், பின் தாய்மாமன் பெண்ணின் கையில் கும்பம் (தேங்காய் மற்றும் மாவிலை வேப்பிலை  மூடப்பெற்ற குடம் அல்லது செம்பு) கொடுப்பார்.

*ஆண்டாள் மாலை (பெற்றோர்)

*கும்பம் (தாய் மாமன் மாமி)


மேடையில் முன்னால் நிறைகுடம் குத்துவிளக்கு, தாம்பூலம் , ஆரத்தி தட்டங்கள் வரிசையாக வைக்கப்பட்டிருக்கவேண்டும் .


• நிறை நாழி (தந்தையின் சகோதரி:மாமி)

பழைமையான வீடுகளில் பார்த்தால் அங்கு காம்புச் சத்தகத்திற்குப்பதில் எழுத்தாணி குத்தப்பட்டிருக்கும். ஆக, எழுத்தாணிதான் அங்கு வரவேண்டியது. அது கிடைக்காததால் அதற்குப் பதிலாக அதே உருவத்தில் நீளமான ஒரு இரும்பு தேவை என அதனைக் குத்தினார்கள். 




• புட்டுதட்டம்

• களிதட்டம்

• பால்சாதம்தட்டம்

• சோறுகறிதட்டம்

• தேங்காய்த் தட்டம்

• பழங்கள்தட்டம்

• பலகாரம்தட்டம்

• பன்னீர்த்தட்டம்

• கால் தட்டம் 

• பூத்தட்டு ( பெண்கள்)

• வெள்ரொட்டி வேப்பிலை தட்டம் (பாட்டிமார்)

• வாழைப்பழம் ஆரத்தி 

• களி ஆரத்தி (தாயார்)

பெற்றோர் தங்களின் உறவுகளில் சுமங்கலிப் பெண்கள் தேர்ந்தெடுத்து இருவர் எதிரெதிரே நின்றுகொண்டு ஒவ்வொரு தட்டங்களையும் ஒன்றன் பின் ஒன்றாக  , மூன்று முறை   கீழும் மேலுமாகம சுற்றிப் பின் பெண்ணின் வலது தோளால் உயர்த்தி  பெண்ணின் தலைக்கு மேல் மூன்று முறை சுற்றிப் பின்னால் கொடுத்து கண்ணூறு கழிப்பார்கள்.

(நிறை நாழியும் பன்னீர்த்தட்டமும் முன்னுக்கு வைக்கவேண்டும்.)

உணவுத் தட்டங்களைத் தலைக்கு மேல் சுற்றிப் பின்னால் கொடுப்பர். பூத்தட்டத்தால் ஆரத்தி எடுத்தபின் பூக்களைப் பெண்மேல் தூவிவிடுதல் வேண்டும்.

பின்பு கடைசியாக  வேப்பிலையால் சுற்றித் தடவி பால் ரொட்டியை உடைத்து நாலுபக்கமும் எறித்து வேப்பிலையால் தலையைச் சுற்றிப் பெண்ணை வாயில் மென்று துப்பச் செய்தபின்னர், வாழைப்பழ ஆரத்தி , கடைசியாக களி ஆரத்தி தாயார் எடுப்பர்.

எப்பவும் நிறைநாழி முதலாவதாகவும் வேப்பிலை வெள்ரொட்டித்தட்டம் இறுதியாகவும் செய்யவேண்டும். அதன் பின் வாழைப்பழம் ஆரத்தி , கடைசியாக களி எடுத்து நிறைவு செய்தல் வேண்டும். அதன் பின்இந்த உணவுப் பண்டங்களை எல்லாம் சலவைத் தொழிலாளிக்குக் கொடுப்பதே மரபாக உள்ளது, அல்லது ஆற்றிலோ, கடலிலோ சேர்த்து விடப்படும்.

பெண்ணின் கையிலிருக்கும் செம்பை  தாய்மான் வாங்கி, நிறைநாழி மாமியாரும் எடுத்துக்கொண்டு பெண்ணையும் அழைத்துக்கொண்டு அறையினுள் சென்று பெண்க்கு மதிய  உணவளித்து, பெண்க்கு மாற்று அலங்காரம் செய்து பெற்றோர் மறுபடியும் பெண்ணை மேடையை நோக்கிச் அழைத்துவந்து சடங்கில் பங்குபற்றிய உறவினர்களிடம் பெண்ணை  வாழ்த்தி ஆசீர்வதித்து தம்மால் இயன்றவரை பரிசளிப்பர். 

அதன் பின் வந்தவர்கள்க்கு பெற்றோர் மதிய உணவு விருந்தளித்து உபசரித்து நன்றி தெரிவிப்பர்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

​ஆடி அமாவாசை விரதம் / சித்ரா பௌர்ணமி விரதம் ::

வீட்டில் இறந்தவர்களின் படங்களை எப்படி வைத்து வழிபட வேண்டும்?

பித்ரு தோஷம்