யாழ்ப்பாணத் தமிழருக்கே உரிய சாமர்த்தியச் சடங்கு ஆரத்திப் பொருட்கள்
சாமர்த்தியச் சடங்கு ஆரத்திப் பொருட்கள்
எம் யாழ்ப்பாணத் தமிழருக்கே உரியதான பாரம்பரிய முறைகளே இங்கு முற்றாகத் தழுவப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
• நிறை நாழி
• புட்டு
• களி
• பால்சாதம்
• சோறுகறி
• தேங்காய்த் தட்டம்
• பழங்கள்
• பலகாரம்
• பன்னீர்த்தட்டம்
• வெற்றிலை பாக்கு எலுமிச்சை
• பூத்தட்டு
• வெள்ரொட்டி வேப்பிலை,
• வாழைப்பழம் ஆரத்தி
• களி ஆரத்தி ( யாழ் புங்குடுதீவு தமிழருக்கே உரிய சடங்கு )
1.நிறை நாழி
நிறை நாழி [நிறை நாழி கொத்தில் நெல்லை அதில் காம்புச்சத்தகத்தைக் கவிழ்த்துக் குத்தி சத்தகத்தை நிற்க வைத்து துனிக்காம்பில் ஒரு வெற்றிலை தேசிக்காயும் பனையோலையும் சொருகி வைப்பர். (சில பழைமையான வீடுகளில் பார்த்தால் அங்கு காம்புச் சத்தகத்திற்குப்பதில் எழுத்தாணி குத்தப்பட்டிருக்கும். ஆக, எழுத்தாணிதான் அங்கு வரவேண்டியது. அது கிடைக்காததால் அதற்குப் பதிலாக அதே உருவத்தில் நீளமான ஒரு இரும்பு தேவை என அதனைக் குத்தினார்கள்]
2.புட்டுதட்டம்
வழமை போல் வறுத்த உழுத்தமா அரிசிமா கலந்து செய்த பிட்டை நீற்றுப் பெட்டியில் மும்முறை அவித்து தட்டத்தில் வைக்கப்படும்.
3.களிதட்டம்
வறுத்த அரிசிமா 1 சுண்டு, வறுத்த உழுத்தமா ½ சுண்டு, தேங்காய்பால் 3 சுண்டு, பனங்கட்டி ¾ சுண்டு உப்பு விரற்பிடியளவு, தேங்காய்ப் பாலைக் காய்ச்சி (உழுத்தமா, அரிசிமா, உப்பு, தூளாக்கிய பனங்கட்டி எல்லாவற்றையும் கலந்து பாலின் மேல் தூவி கட்டிபடாமல் கிளறி எடுத்து 3 தளிசுகளாக தட்டத்தில் வைப்பர்.
4.பால்சாதம்தட்டம்
பச்சை அரிக்குள் தேங்காய்ப் பாலும், நீரும் சிறிது உப்பும் போட்டு சாதமாக அவித்து 3 தளிசுகளாகத் தட்டில் வைக்கலாம்.
5.சோறுகறிதட்டம்
மரக்கறிஉணவு
6.தேங்காய்த் தட்டம்
முடியுடன் கூடிய 3 தேங்காய்களை மஞ்சள் நீர் கொண்டு கழுவித் தட்டில் வைப்பர்)
7.பழங்கள் தட்டம்
வாழைப்பழம்,மாம்பழம், திராட்சை,தோடம்பழம் ,மாதுளை
8.பலகாரம்தட்டம்
அரியதரம், அச்சுப்பலகாரம், பயற்றம் உருண்டை, வெள்ரொட்டி, சிற்றுண்டி போன்றவை.
9.பன்னீர்த்தட்டம்
பன்னீர் ,விபூதி சந்தனம், குங்குமம்
10.கால் தட்டம்
வெற்றிலை ,பாக்குசீவல், எலுமிச்சை
11.பூத்தட்டு
ரோஜா இதழ்கள்
13.வெள்ரொட்டி வேப்பிலைதட்டம்
1 சுண்டு பச்சை அரியை கழுவி ஊற வைத்து இடித்து ¼ சுண்டு கப்பிமா எடுப்பர். மிகுதியை மாவக்குவர் இரண்டையும் கலந்து ½ தேக்கரண்டி உப்பும்சேர்ப்பர். ஒரு தேங்காய் துருவி முதல் பால் எடுத்து காய்ச்சி மாவில் ஊற்றி இறுக்கமாக கையில் ஒட்டாத பதத்திற்கு குழைப்பர். ½ மணித்தியாலம் விட்டு ஒரு வாழையிலையில் எண்ணெய் தடவி மாவை சிறு உருண்டைகளாகத் தட்டி எண்ணெயில் பொரிப்பர். இது பூரி போல் பொங்கி வரும்
14.வாழைபழ ஆரத்திதட்டம்
ஒரு தட்டில் தாழம்பூ குங்குமம் (படிகாரம் ,மஞ்சளும், சுண்ணாம்பும்) கலந்த தண்ணீருக்கு சிவப்பு நிறம் வருகிறது 3 வாழைப்பழத் துண்டுகள் வைத்து அதன் நடுவே திரியைச் செருகவேண்டும். இலகுமுறை ஒரு நெருப்புக் குச்சியில் பச்சைசுற்றி நெய்யில் தோய்த்த வாழைபழத்தின் நடுவே குத்துவதாகும்.
15.களி ஆரத்திதட்டம் (தாயார்க்கே உரியது)
9 அல்லது 11 சிறிய தளிசுகளாக தட்டத்தில்
வைத்து அதன் நடுவே திரியைச் செருகவேண்டும். இலகுமுறை ஒரு நெருப்புக் குச்சியில் பச்சைசுற்றி நெய்யில் தோய்த்த களி நடுவே குத்துவதாகும்.
எப்பவும் பெண்ணின் தாயார் எடுக்கும் ஆரத்தி (தாயார் சுமங்கலியா பார்க்கதேவையில்லை)
*******
எப்பவும் நிறைநாழி முதலாவதாகவும் வேப்பிலை வெள்ரொட்டித்தட்டம் இறுதியாகவும் செய்யவேண்டும். பின் வாழைப்பழம் ஆரத்தி அதன் பின் பெண்ணின் தாயார் எடுக்கும் களி ஆரத்தி எடுத்து நிறைவு செய்தல் வேண்டும்.

கருத்துகள்